Tamil_News_large_1882248_318_219

கிருமிகளை கொல்லும் மரங்கள்!


நதிகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளை ஒட்டி, நிறைய மரங்கள் இருந்தால், அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்க முடியும் என, ‘நேச்சர்’ இதழில் வந்துள்ள ஆய்வு தெரிவிக்கிறது. உலகெங்கும் தொற்றுகள் உள்ள நீர் மற்றும் சுகாதாரமின்மையால் லட்சக்கணக்கான குழந்தைகள் ஐந்து வயது நிறைவதற்குள்ளேயே இறந்து விடுவதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

நீர் நிலைகளை ஒட்டி நிறைய மரங்கள் இருந்தால், அவை தண்ணீரில் கிருமித் தொற்றுகள் உண்டாவதை தடுக்கும் வடிகட்டிகளாக செயல்படுவது முக்கியமான கண்டுபிடிப்பாக நேச்சர் இதழ் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுக்கு, 35 நாடுகளிலிருந்து புள்ளி விபரங்கள் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நீர் நிலைகளுக்கு அருகே மரங்களின் அடர்த்தி, 35 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், அப்பகுதியில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது, நான்கு சதவீதம் குறைவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.