iran president

எந்தத் தாக்குதலையும் சந்திக்கத் தயார்; சவுதி அரேபியாவை எச்சரிக்கும் ஈரான்


சவுதி அரேபியாவின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. அவர்கள் தாக்குதல் நடத்தினால் அதைச் சந்திக்கத் தயாரகவே இருக்கிறோம் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏமன் நாட்டின் அரசுக்கு உதவும் வகையில் ஹவுதி படையினர் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஹவுதி படையினர் சவுதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் அவர்கள் வீசிய ஏவுகணை தலைநகர் றியாத்தில் விழுந்தது. இது சவுதி அரேபியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஹவுதி அமைப்பினருக்கு ஈரான் ஆயுத உதவி செய்வதாகவும், இதனால்தான் அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்துகிறார்கள் என்றும் கருதியது. இதனால், ஹவுதி அமைப்பினருக்கு ஆயுத உதவி செய்வதை நிறுத்தாவிட்டால் ஈரான் மீது போர்; தொடுப்போம் என்று சவுதி அரேபிய இளவரசர் முகமதுபின் சல்மான் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி தெரிவிக்கையில், ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினருக்கு நாங்கள் எந்த ஆயுத உதவியும் செய்யவில்லை. ஏமனின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்கள் மீது அபாண்டமாக இக்குற்றச்சாட்டுகளைக் கூறி எங்கள் மீது போர் தொடுப்போம் என்று சவுதி அரேபியா கூறியுள்ளது. ஆனால் சவுதி அரேபியாவின் இந்த மிரட்டலுங்கக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. அவர்கள் தாக்குதல் நடத்தினால் அதைச் சந்திக்கத் தயாரகவே இருக்கிறோம். ஈரானிய மக்கள் சவுதி அரேபிய மக்களைவிட வலுவானவர்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.