ZIM-PRESIDENT

ஜனாதிபதி; ராபட் முகாபே இராஜினாமா! தொடர் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி


சிம்பாவே நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராபட் முகாபேவை தகுதிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ஆபிரிக்க நாடான சிம்பாவேயில் ராபட் முகாபே 1980-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை ஜனாதிபதி; எம்மர்சன் நாங்காக்வா-வை முகாபே பதவி நீக்கம் செய்தார்.

இதனால், ஆளும் ஷானு – பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை ஜனாதிபதி; நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, கடந்த 15-ம் திகதி ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது. ஜனாதிபதி முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் இராணுவத்தின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஜனாதிபதி முகாபேவை பதவி நீக்கம் செய்து, நாடு கடத்துவது குறித்து மாகாண ஆளுநர்கள் மற்றும் ஆளும்கட்சியின் அவசர கூட்டம் ஹராரே நகரில் நேற்று நடைபெற்றது.

முகாபேவை ஆட்சியை விட்டு நீக்க வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டாக பிரசார இயக்கம் நடத்தி வந்த சிம்பாவே நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கிறிஸ் முட்ஸ்வாங்வா இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

ராபட் முகாபேவை ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியும் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை ஜனாதிபதியை நியமித்தும் இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் கட்சித்தலைவர் மற்றும் ஜனாதிபதி பதவியிலிருந்து முகாபே இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இராஜினாமா செய்ய முகாபே மறுத்து விட்டதாக செய்திகள் வெளியானது.இந்நிலையில், சிம்பாப்வே பாராளுமன்றம் அவசரமாக இன்று கூடியது. அப்போது ஜனாதிபதி முகாபேவை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை ஆளும்கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்தனர். அதன் மீதான விவாதத்தில் பெரும்பாலானோர் முகாபே பதவி விலக வேண்டும் என பெருமபாலான எம்.பி.க்கள் பேசினர்.

இதற்கிடையே பேசிய, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி பதவி விலகுவதோடு பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

அப்போது பேசிய நாடாளுமன்ற சபாநாயகர், ஜனாதிபதி முகாபே தானாக முன்வந்து பதவி விலகிவிட்டதாக அறிவித்தார். அவரது இராஜினாமா கடிதமும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.இதையடுத்து அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம் முடித்துவைக்கப்பட்டது.

முகாபே இராஜினாமா செய்ததையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய ஜனாதிபதியாக முன்னாள் துணை ஜனாதிபதி; எம்மர்சன் நாங்காக்வா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.