4276625.0.560.350.160.300.053.800.668.160.90

மசூதி தாக்குதலுக்கு பதிலடி – தீவிரவாதிகள் முகாம்கள் மீது இராணுவம் தாக்குதல்


எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியிலுள்ள மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் முகாம் மீது இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்திலுள்ள அல் ராவ்தா மசூதி அருகே நேற்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் 234 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுமார் 180 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, எகிப்து பிரதமர் அப்துல் பாத்தா இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறினார். மேலும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், மசூதி தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருவதாக எகிப்து ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மசூதி தாக்குதலுக்கு பயன்படுத்தபட்ட வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இராணுவத்தின் இந்த தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது பற்றி இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.