rahul ka

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வானார்!


காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி செயற்பட்டு வந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவராக இருந்து வந்த ராகுல் காந்தியை தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல்கள் நடந்து முடிந்ததையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தலைவர் பதவிக்கு கடந்த 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ராகுல் காந்தி கடந்த 4-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மொத்தம் தாக்கலான 89 வேட்புமனுக்களும் ராகுலை தலைவர் பதவிக்கு அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டன.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் 16-ம் தேதி தேர்தல் நடக்கும் என்றும் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மனுக்களை வாபஸ் பெற 11-ம் தேதி (இன்று) கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ராகுலைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.