pon vannan

பதவி விலகலை மீளப் பெற்றார் நடிகர் பொன் வண்ணன்!


நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்த நடிகர் பொன்வண்ணன், தற்போது ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இரண்டு பதவிகளை வகித்து வருகிறார் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் அவருடைய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதன் எதிரொலியாக, நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவுக்கான காரணத்தை கடிதமாக எழுதி நடிகர் சங்கத்தின் தலைவர் நாசருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் டிசம்பர் 11-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பொன்வண்ணனின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்று நடிகர் சங்கம் தீர்மானித்து, அவருடைய பணி மேலும் தொடரும் வகையில் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமும் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பதவி ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக பொன்வண்ணன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும், மலேசியா சென்று சிறப்பாக கலை நிகழ்ச்சி முடித்துவிட்டு, அடுத்த ஆறு மாத காலம் நல்ல முறையில் செயல்பட வேண்டும்.

கார்த்திக், விஷால் என்னைவிட வயதில் சிறியவர்கள் நான் என்ன சொன்னாலும் கேட்கக் கூடியவர்கள். நாசர் சார் என்னைவிட மூத்தவர், நான் எது சொன்னாலும் அதை எடுத்துக்கொள்வார். நான் அவர்களை விட ஒரு படி மேல் சென்று பணியாற்ற வேண்டிய கட்டத்தில் இருப்பதினால் நான் நடிகர் சங்க துணைத் தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்றுகொண்டு நண்பர்களுடன் இணைந்து நடிகர் சங்க கட்டிடத்திற்காக என் பணியினை தொடர்ந்து செய்வேன்.

என் தனிப்பட்ட கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நடிகர் சங்க கட்டிடத்திற்காக பெரிய நடிகர்களுடன் நட்பை பெற்றும் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் உதவுவதில் மிகப் முக்கிய பங்கு உள்ளது. நடிகர் சங்கத்தில் இருப்பதில் இருந்து அரசியலுக்கு பயன்படுத்துவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை” என்று பொன்வண்ணன் கூறினார்.