yosiyam sani

சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி? (2017-2020)


  • கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
  • மேஷம்

   தாய்மொழி, தாய்நாடுமீது அதிக அக்கறை கொண்ட நீங்கள், மாளிகையில் இருந்தாலும் மண்ணை நேசிப்பவர்கள். மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் வீடான அஷ்டமத்தில் அமர்ந்து கொண்டு உங்களுடைய வாழ்க்கையில் சூறாவளியை ஏற்படுத்தி அஷ்ட கோணலாகப் புரட்டிப் போட்ட சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரையுள்ள காலகட்டங்களில் 9ம் வீட்டில் அமர்வதால் இனி புதிய வியூகம் அமைத்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். எப்போது பார்த்தாலும் சோகமே உருவாக இருந்த உங்கள் முகத்தில் புன்னகை மிளிரத் துவங்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தோல்வியில் முடிந்ததை நினைத்து அவ்வப்போது ஆதங்கப்பட்டீர்களே! உங்களுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் கூட உங்களை அவமதிக்கும் நிலைக்கு ஆளானீர்களே! இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும். வருடக் கணக்கில், மாதக் கணக்கில் கிடப்பில் கிடந்த வேலைகளையெல்லாம் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வீண் விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள்.

   சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

   சனிபகவான் 3ம் வீட்டை பார்ப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. சொந்தபந்தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சனிபகவான் 6ம் வீட்டை பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் கடினமான வேலைகளையும் சாமர்த்தியமாக செய்து முடித்து எல்லோரின் பாராட்டையும் பெறுவீர்கள்.

   சனிபகவான் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

   19.12.2017 முதல் 18.1.2019 மற்றும் 12.8.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் திருப்பம் உண்டாகும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வீடு, வாகன வசதி பெருகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்று
   மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். ஆனால் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு விவாதங்கள், அநாவசியச் செலவுகள், யூரினரி இன்ஃபெக்ஷன், அலர்ஜி, மறைமுக எதிர்ப்புகளெல்லாம் வந்துபோகும்.

   உங்களின் தனசப்தமாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். இடம், பொருள், ஏவலறிந்து செயல்படுவீர்கள். இங்கிதமாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடிவரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். பணவரவு உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு சளித் தொந்தரவு, காய்ச்சல், தொண்டைப் புகைச்சல் வரக்கூடும்.

   25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகும். சிலர் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து வேறு ஊர், வேற்று மாநிலம் அல்லது வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். ஆனால் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

   சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

   29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். நெருங்கியவர்களாக இருந்தாலும் ஜாமீன் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். திடீரென்று அறிமுகமாகும் நபர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்து போகும். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி, சிறுநீர் பாதையில் அழற்சியெல்லாம் வரக்கூடும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீட்டை விரிவுபடுத்துவது, வர்ணம் பூசுவது, அழகுபடுத்துவது போன்ற பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். மின்னணு, மின்சார சாதனம் பழுதாகும். வாகனத்தை இயக்கும்போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்வது நல்லது.

   மனைவிவழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். 2.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எத்தனையோ புது முயற்சிகளும், முதலீடுகளும் மேற்கொண்டும் நட்டம்தானே மிஞ்சியது. இனி லாபம் அதிகரிக்கும். கடையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மெயினான இடத்திற்கு மாற்றுவீர்கள். அடிக்கடி வேலையாட்கள் மாறிக் கொண்டேயிருந்தார்களே! இனி நல்ல கல்வித் தகுதியுள்ள, அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். பலமுறை கேட்டும் வராமலிருந்த பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். சந்தை நிலவரம் தெரியாமல் சரக்குகளை வாங்கிப் போட்டு சங்கடப்பட்டீர்களே! இனி மக்கள் ரசனைக் கேற்ப மாறுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளும் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

   வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிரபலமானவர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வங்கியில் வாங்கியிருந்த கடனை ஒருவழியாக கட்டி முடிப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, போர்டிங், லாட்ஜிங், எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு. உத்யோகத்தில் இந்த மூன்று ஆண்டுகளுக்குள் பலர் நேர்முகத் தேர்விற்கு சென்று, சம்பளம் திருப்பதியில்லாமலும், கல்வித் தகுதிக்கேற்ற வேலை அமையாமலும் எத்தனையோ அலுவலகங்கள் ஏறி இறங்கி அலுத்துப் போனீர்களே! அப்படியே எந்தவேலை கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துச் சென்றாலும் ஊழியர்களாலோ அல்லது அதிகாரிகளாலோ பிரச்னைகளை சந்தித்தீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். அதிக சம்பளம் கிடைத்து நிலையான வேலையில் சென்று அமருவீர்கள். தொல்லை கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார்.

   பதவி, சம்பள உயர்வெல்லாம் இனி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! போலியான நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். உண்மையானவர்களின் அறிமுகம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். பெற்றோர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். காதலும் கனிந்து வரும். மாணவ மாணவிகளே! மந்தம், மறதி விலகும். நினைவாற்றல் அதிகரிக்கும். முதல் மதிப்பெண் பெறுவதற்காக கடுமையாக உழைப்பீர்கள். ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விரும்பிய கோர்ஸில் இடம் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் உண்டு. கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் வலுவிழப்பார்கள். ஹிந்தி, கன்னடம் பேசுபவர்களால் புது வாய்ப்புகள் வரும். அரசால் ஆதாயம் உண்டு. இந்த சனிப்பெயர்ச்சி வறுமை, வருத்தங்களிலிருந்து விடுபட வைப்பதுடன் நிம்மதியையும், செல்வ வளத்தையும் தருவதாக அமையும்.

  • ரிஷபம்

   எதிர்மறை எண்ணங்களுடன் வருபவர்களை ஆற்றுப் படுத்தி நேர்வழியில் கொண்டு செல்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து சின்னச் சின்ன தடைகளையும், அவ்வப்போது உடல் நலக்குறைகளையும் தந்தாலும் ஓரளவு யோக பலன்களையும் தந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 8ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து இனி பேச வேண்டாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உஷாராக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதம் சில சமயங்களில் கோபத்தின் உச்சிக்கே கொண்டு போகும். மகனின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு சிலரின் சிபாரிசை நாடுவீர்கள்.

   மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்காக உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனசை வாட்டும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வரவேண்டிய பூர்வீகச் சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். சிலர் உங்கள் முன் புகழ்ந்து பேசிவிட்டு பின்னாடி இகழ்ந்து பேசுவார்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். அறுவை சிகிச்சை உண்டு. வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வீட்டு விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். சகோதரர்கள் குறைப்பட்டுக் கொள்வார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கப்பாருங்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.

   சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

   சனிபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால், சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்வீக சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். சனிபகவான் 10ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும்.

   சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

   19.12.2017 முதல் 18.1.2019 மற்றும் 12.8.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் பணவரவு, உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைக்கட்டும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கிருத்திகை 2,3,4 மற்றும் மிருகசீரிஷம்1,2ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு இக்காலக்கட்டத்தில் புதுவேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள், பிறமொழிக்காரர்கள் உதவுவார்கள். ஆனால், ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்களில்போது சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். உங்களின் ராசிநாதனும் சஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலகட்டத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். இழுபறியான வேலைகள் முடியும்.

   குழந்தை பாக்யம் உண்டு. தாமதமானாலும் எதிர்பார்த்த பணம் வரும். கிருத்திகை 2, 3, 4 மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நல்லது நடக்கும். ஆனால் மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு சிறுசிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல், ஒற்றை தலை வலி, உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்துச் செல்லும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு சுகாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் வீடு, மனை சேரும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. ரோகிணி மற்றும் மிருகசீரிஷம் 1, 2ம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். என்றாலும் கார்த்திகை 2,3,4ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறைக் காட்ட வேண்டும்.

   சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

   29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் தடைபட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். கடன் பிரச்னை தீரும். அயல்நாடு மற்றும் புகழ்பெற்ற புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் இக்கால கட்டத்தில் சளித்தொந்தரவு, காய்ச்சல், பல்வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
   2.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் சகோதரங்கள் மற்றும் தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துபோகும். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். வியாபாரத்தில் வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும்.

   பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். அரசு விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். இக்காலக்கட்டத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்களுக்காக பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் சற்று தாமதமாகி கிடைக்கும்.

   மாணவமாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். அன்றைய பாடத்தை அன்றன்றே படிப்பது நல்லது. கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்க வேண்டாம். வேதியியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே! அவசர முடிவுகளை எடுத்து அவதிப்பட்டீர்களே! இனி வெளுத்ததெல்லாம் பாலென்று நினைத்து ஏமாறாதீர்கள். வாட்ஸ் அப், முகநூலில் மூழ்கிக் கிடக்காதீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. காதல் விவகாரங்களில் நிதானம் தேவை. முன் கோபத்தைத் தவிர்க்கப்பாருங்கள். புதிய வேலை கிடைக்கும். கலைத்துறையினர்களே! திரைப்பட கலைஞர்களுக்கு இந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் முன்னேற்றம் உண்டு. தொலைக்காட்சி கலைஞர்களே புதிய வாய்ப்புகள் தேடி வரும். விமர்சனங்களையும், வதந்திகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். இந்தச் சனிப் பெயர்ச்சி உங்களைத் தனித்து நின்றே வெற்றி பெற வைக்கும். சக்தியையும், சகிப்புத் தன்மையையும், பணப் புழக்கத்தையும் தருவதாக அமையும்.

  • மிதுனம்

   இதயத்தால் பேசும் நீங்கள், எல்லா வேலைகளையும் எடுத்துக் கட்டி செய்பவர்கள். நிர்பந்தங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் அடிபணிய மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்ந்து எல்லா வகையில் முன்னேற்றத்தையும், அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகரிக்க வைத்தாரே. நாடாளுபவர்களின் நட்பையும், வேற்று மதத்தினர்களின் அறிமுகங்களையும் கிடைக்கச்செய்தாரே. பணப்புழக்கம் சரளமாக இருந்ததால் சொத்து வாங்கினீர்களே. நல்லது கெட்டது அறிந்து செயல்பட வைத்தாரே. கோர்ட்டு, கேஸ் என்று பல வகைகளிலும் சிக்கிக்கொண்டிருந்த உங்களை மீள வைத்தாரே, நாலு பேர் மதிக்கத்தக்க வகையில் உங்களின் தராதரத்தை உயர்த்திக் காட்டிய சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 7ம் வீட்டில் கண்டகச் சனியாக அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும்.

   குடும்பத்தில் வீண் விவாதங்கள் வரக்கூடும். வங்கிக் காசோலைகளில் முன்னதாக கையெழுத்து போட்டு வைக்காதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக ஒருமுறைக்கு இருமுறை கவனமாக படித்துப் பார்ப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த காரியமும் செய்ய வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவால் ஆரோக்யம் பாதிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மகனின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரியை நாடவேண்டியிருக்கும். உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டுமென்று வாகனத்தில் அடித்துப் பிடித்து போகாமல் முன்னதாகவே செல்லப்பாருங்கள்.

   சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

   சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு,பேஸ்ட் வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அலர்ஜியால் தோலில் நமைச்சல், கட்டி, முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. செறிமானக் கோளாறு வந்து நீங்கும். உப்பு, புளி, மிளகாயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். மறதியும், பித்தத்தால் தலைச்சுத்தலும் வந்து நீங்கும். சனிபகவான் 4ம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அவ்வப்போது குடிநீர், கழிவுநீர் பிரச்சனைகள் வந்துபோகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும்.

   சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

   19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் குடும்பத்தில் சோகம் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கு புது வழி பிறக்கும். முன்கோபம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். பணபலம் அதிகரிக்கும். மிருகசீரிஷம் 3,4ம் பாதம் மற்றும் புனர்பூசம் 1,2,3ம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உறவினர்கள், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உங்களின் பூர்வபுண்ணியாதிபதியும் மற்றும் விரயாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் அதிகரிக்கும்.

   கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் அதிகம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உறவினர் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்தி வைப்பீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் மிருகசீரிஷம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கி பேச வேண்டாம். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் தைரியஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். உதவிகளும் கிடைக்கும். சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மிருகசீரிஷம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும். ஆனால் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். மனைவியின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

   சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

   29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் ஆடம்பரச் செலவுகளை கொஞ்சம் குறைத்து சேமிக்கத் தொடங்குங்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். என்றாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய் வழி உறவுகளுடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும்.
   02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேர்வீர்கள். ஆனால் மகளுக்கு வரன் பார்க்கும் போது கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

   வியாபாரத்தில் கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக்கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத்தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். கூட்டுத் தொழில் வேண்டாமே. வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்டாதீர்கள். முடிந்த வரை கடன் தருவதை தவிர்க்கப்பாருங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். அரிசிபருப்பு மண்டி,கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும். சிலருக்கு பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். அனுபவமிக்க வேலையாட்களை ஊக்கத்தொகை, சலுகைகள் என கொடுத்து தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
   உத்யோகத்தில் முன்புபோல் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

   மேலதிகாரிகளைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் தாமதமாகத் தான் கிடைக்கும். எதிர்பாராத இடத்திற்கு திடீரென மாற்றப்படுவீர்கள்.
   கன்னிப் பெண்களே! காதல் கண்ணாம்பூச்சியெல்லாம் வேண்டாம். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். மாணவமாணவிகளே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். மந்தம், மறதி வரும். தேர்வு நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்கால் மதிப்பெண் குறையும். விளையாட்டின் போது சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கலைத்துறையினர்களே! சிறுசிறு வாய்ப்புகளாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துங்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். இந்தச் சனிப்பெயர்ச்சி அடங்கியிருந்த உங்களை அதிரடியாக வளர்ச்சியடையச் செய்வதுடன் அனைத்திலும் முதலிடம் பிடிக்க வைப்பதாக அமையும்.

  • கடகம்

   மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் மனம்விட்டுப் பேசும் நீங்கள், தயாள குணம் கொண்டவர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்கும், அசாத்திய திறமை கொண்ட நீங்கள், அதிகாரப் பதவியில் அமர்ந்தாலும் அடக்கமாக இருப்பீர்கள். தவறுசெய்யும் வாய்ப்பிருந்தும் தவறாதவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் செய்யவிடாமல் பல்வேறு தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுத்து வந்தாரே. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல், சாதகமாக முடியவேண்டிய சில வேலைகள் கூட போராடி முடிக்க வேண்டியதானதே, குடும்பத்திலும் கொஞ்சம் கூட நிம்மதியில்லாமல் தவித்தீர்களே, நீங்கள் நல்லதே சொன்னாலும் அதை சிலர் தவறாகத்தானே புரிந்து கொண்டார்கள். தொழிலில் முடக்கம், அதனை சமாளிக்க ஒரு கடன், அதனை அடைக்க மற்றொரு கடன் என்று உங்களின் கடன் பட்டியலும் நீண்டுக்கொண்டே போனதே.

   இவ்வாறு பல வகைகளில் உங்களை வாட்டியெடுத்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 6ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித்தருவார். எப்போது பார்த்தாலும் ஒருவித மனஇறுக்கத்துடனும், கோபத்துடன் காணப்பட்டீர்களே! இனி அவற்றிலிருந்து எல்லாம் விடுபடுவீர்கள். உடம்பு தூங்கினாலும், மூளைத் தூங்காமல் இருந்ததே! இனி முழுத்தூக்கம் வரும். நெடுநாட்களாக தடைபட்டுவந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். உங்களை உதாசீனப்படுத்திய சொந்த பந்தங்கள், நண்பர்கள் இனி தேடி வந்து உறவாடுவார்கள்.

   பல காலங்கள் இருந்த வீட்டிலிருந்து புது வீடு மாறுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடு கட்டி குடிபுகுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். மகனுக்கு எங்கெல்லாமோ பெண் தேடி அலைந்தீர்களே, இனி உங்கள் அருகிலேயே உங்களுக்கு தெரிந்த சம்பந்தமே அமையும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் புகழ் பெற்ற நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். கையில் காலணா தங்காமல் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி செலவுகளால் சிக்கித் தவித்தீர்களே! இனி நாலுகாசு கையில் தங்கும். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அவ்வப்போது அடிவயிற்றில் வலியும், அடிக்கடி இருமிக் கொண்டும் இருந்தீர்களே! இனி ஆரோக்யம் மேம்படும்.

   சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

   சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். ஆனால் கூடாப் பழக்கம் உள்ளவர்களை தவிர்க்கப்பாருங்கள். குடலுக்கும், உடலுக்கும் கேடு விளைவிக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டாம். சனிபகவான் 8ம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். அந்தரங்க விஷயங்களை அடிமனதில் தேக்குவது நல்லது. ஆனால் மகான்களின் தரிசனம் கிடைக்கும். சனிபகவான் 12ம் வீட்டை பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆலயங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

   சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

   19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். மேலும் புனர்பூசம் 4ம் பாதம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும். ஆனால் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய வேலைகள் தடைபட்டு முடியும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களின் சுகலாபாதிபதியாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.

   மன உளைச்சல்,டென்ஷன் விலகும். வீடு மாறுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் புனர்பூசம் 4ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் தனஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் உங்களின் பேச்சில் கம்பீரம் பிறக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்யம் திருப்தி தரும். புனர்பூசம் 4ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் அமையும். ஆனால் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

   சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

   29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் இழுபறியான வேலைகள் உடனடியாக முடியும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. கடந்த கால கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள். வீடு, மனை வாங்கும் போது தாய்ப்பத்திரத்தை சரிபார்த்துக்கொள்ளுங்கள். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். பழைய பிரச்சனைகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும்.

   பல முறைக் கேட்டும் வராமலிருந்த பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். சந்தை நிலவரம் தெரியாமல் சரக்குகளை வாங்கிப் போட்டு சங்கடப்பட்டீர்களே! இனி மக்கள் ரசனைக் கேற்ப மாறுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிரபலமானவர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். பங்குதாரர்கள், வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்யோகத்தில் நிராகரிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டீர்களே! இனி உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். ஒரு சிலர் எந்த வேலையிலும் நிலைக்காமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தீர்களே! இனி அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. வெகுநாட்களாக போராடிய சம்பள பாக்கியும் கைக்கு வரும். மேலதிகாரியுடன் இருந்த மோதல் நீங்கும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணினி துறையிலிருப்பவர்களுக்கு அயல்நாட்டுத்தொடர்புடைய புதிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும்.

   கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். கல்யாணம் கூடிவரும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விடுபட்ட பாடத்தை எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். பெற்றோர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். மாணவமாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். முதல் மதிப்பெண் பெறுவதற்காக கடுமையாக உழைப்பீர்கள். ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பார்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் உண்டு. கலைத்துறையினர்களே! வாய்ப்புகள் எதுவாயினும் திறம்பட செய்துமுடித்து வெற்றி காண்பீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வருமானம் உயரும். இந்தச் சனிப்பெயர்ச்சி ஒதுங்கியிருந்த உங்களை உற்சாகப்படுத்துவதுடன், வசதி வாய்ப்புகளை தருவதாக அமையும்.

  • சிம்மம்

   மனிதநேயமும் மண்ணாளும் யோகமும் தவறுகளை தட்டிக் கேட்கும் நெஞ்சுரமும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்து நாலாவிதத்திலும் உங்களை சின்னாபின்னமாக்கிய சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 5ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சமாகி வலுவடைவதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும். இதுவரை சுக ஸ்தானத்தில் அமர்ந்து சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க விடாமல், ஏமாற்றங்களையும், அலைக்கழிப்புகளையும் சந்தித்தீர்களே, நிலையான ஒரு இடமில்லாமல் அடிக்கடி வீடு மாறிக் கொண்டிருந்தீர்களே! தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போனதே, அதுமட்டுமில்லாமல் அவருடன் கருத்து மோதல்களும் வெடித்ததே, உத்யோகத்திலும் அசிங்கப்பட்டீர்களே!

   இனி அந்த அவல நிலை மாறும். ஏதாவது முக்கியமான காரியத்திற்கு செல்லும்போது தான் வண்டி கூட தகராறு செய்யுமே, அதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் போகாததால் சில வாய்ப்புகளைக்கூட தவற விட்டீர்களே, அடிக்கடி வாகன விபத்துகளையும் சந்தித்தீர்களே. வீட்டில் நுழைந்தாலே சண்டை சச்சரவாக இருந்ததே, இப்படி பல்வேறு நிலைகளில் உங்களை உருக்குலைய வைத்த சனி பகவான் இப்போது உங்களின் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்து பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தாயாரின் புலம்பல் குறையும். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்று போனதே, இனி பணவரவு அதிகரிக்கும். வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் கோலாகலமாக செய்வீர்கள். உங்களை கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள், நண்பர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள்.

   கணவன் – மனைவிக்குள் சாதாரணமாக பேசினாலே சண்டை சச்சரவுகள் வெடித்ததே! இனி மணிக்கணக்கில் பேசினாலும் மனவருத்தம் ஏற்படாது. நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டி கோயில் குளமென்று சுற்றி சுற்றி ஒரு பலனுமில்லாமல் போனதே, இனி கவலை வேண்டாம். 5ம் இடத்தில் சனி அமர்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். என்றாலும் கர்ப்பிணிப் பெண்கள் தொலை தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சாலைகளை கடக்கும் போது நிதானம் தேவை. அலைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்.

   சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

   சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் இடம்பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. சில நேரங்களில் உங்களையும் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. அக்கம்பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். சிலசமயங்களில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போகக்கூடும். ஆகவே அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை,கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். சனிபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நெடுநாட்களாக வராமலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். மூத்த சகோதரர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் இருந்ததல்லவா, இனி அந்த நிலை மாறும். பாசமாக நடந்து கொள்வார். மார்க்கெட்டில் புதிதாக வந்த வாகனத்தை வாங்குவீர்கள்.

   சனிபகவானின் நட்சத்திரப் சஞ்சாரப் பலன்கள்:

   19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் சொத்து சேர்க்கையுண்டு. சிலர் இருக்கும் வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் புதிதாக வாங்குவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. பூரம், உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நல்ல பலன்கள் உண்டாகும். உங்களின் தைரியஸ்தானாதிபதியும் யோகாதிபதியுமாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால்வீடு,வாகனம் வாங்குவீர்கள். விலையுயர்ந்த நகைகள், ஆடைகள் வாங்குவீர்கள்.

   பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். சொந்த பந்தங்கள் வியக்கும்படி நடந்துகொள்வீர்கள். மகம், உத்திரம் 1ம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் ராசிநாதனாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய பிரச்சனைக்கு தீர்வு கிட்டும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வருமானம் உயரும். ஆனால் மகம், உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது. எந்த செயலிலும் அலட்சியம் வேண்டாம். ஆனால் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும்.

   சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

   29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் மூத்த சகோதரங்களுடன் கருத்து மோதல்கள் உண்டாகும். கடன் பிரச்சனை தலைதூக்கும். பயணத்தின் போது சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். ஆனால் ஆரோக்யம் மேம்படும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் வீண் செலவுகளும், அலைச்சல்களும் வரக்கூடும். எடுத்த வேலைகளை இழுபறிக்குப் பின்னரே முடிக்க வேண்டி வரும். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் செல்வாக்கு, புகழ், கூடும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும்.

   அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்து கொண்டு கொள்முதல் செய்யப்பாருங்கள். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். விளம்பர சாதனங்களை சரியாகப் பயன்படுத்தி விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். ஏற்றுமதி இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. ஏஜென்சி,புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபமடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மற்றவர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டு பார்க்க நேரிட்டதே, இனி அந்த அவல நிலை மாறும். உங்கள் திறமையை குறைத்து எடைபோட்டார்களே! இனி அதிகாரிகளே ஆச்சரியப்படும்படி சில கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக்காட்டுவீர்கள்.

   சக ஊழியர்களும் உங்களின் செல்வாக்கை நினைத்து நட்புறவாடுவார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். துறை மாறிப் பணியாற்றியவர்களுக்கு படிப்புக் கேற்ற வேலை கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் தவித்தீர்களே, இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். பெற்றோரின் அரவணைப்பு முழுமையாக கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை வரக்கூடும். நாட்டமில்லாமல் இருந்து வந்த உயர்கல்வியில் இனி ஆர்வம் பிறக்கும். மாணவமாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சு குறையும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டில் பதக்கம் உண்டு.கலைத்துறையினர்களே! நீங்கள் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமைகள் வெளிப்படும். பெரிய கலைஞர்கள் உங்களை பாராட்டிப் பேசும் அளவிற்கு உயர்வீர்கள்.இந்த சனிப்பெயர்ச்சி தடுமாற்றம், தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுவிப்பதுடன் புதிய பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

  • கன்னி

   அழுத்தமான கொள்கை கோட்பாடுகளை கொண்ட நீங்கள், பகைவனுக்கும் உதவும் பரந்த மனசுக்கு சொந்தக்காரர்கள். இதுவரை ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்து உங்களை எந்த வேலையையும் எளிதில் முடிக்கும் சாமர்த்தியத்தையும், மதிப்பு, மரியாதையும் தந்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் சுக வீடான 4ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத் தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை பெறுவீர்கள். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கிக் கொள்வீர்கள். தாயாப் பிள்ளையாக இருந்தாலும் வாயும், வயிறும் வேறு என்பதைப் போல எந்த விஷயத்திலும் கூட்டு வேண்டாம்.

   மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்கள், தங்க ஆபரணங்களை இரவல் தரவும் வேண்டாம், பெறவும் வேண்டாம். குடும்பத்தில் கணவன்மனைவிக்குள் சந்தேகத்தால் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். பெரிது படுத்திக் கொள்ளாதீர்கள். தாயாருக்கு சிறு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். கழிவுநீர் பிரச்சனை, மின்சார சாதனங்கள் பழுதடைதல், வேலையாட்கள் பிரச்சனையும் வந்துபோகும். எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரருடன் எந்த வம்பும் வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிள்ளைகள் கொஞ்சம் செலவு வைப்பார்கள். அவர்களின் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

   சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

   சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். கண்ணிற்கு கீழ் மற்றும் கழுத்துப் பகுதியில் கருவளையம் வரக்கூடும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். வெளியிடங்களில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை குடிக்க வேண்டாம். சனிபகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10ம் வீட்டை பார்ப்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புது பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும்.

   சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

   19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து ஒரு படி உயரும். தங்க நகைகள் சேர்க்கை உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்திரம் 2,3,4 மற்றும் சித்திரை 1,2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும். ஆனால் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கணவன்மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. உங்களின் தனபாக்யாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பணவரவு அதிகரிக்கும்.

   பெருந்தன்மையாக பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்திரம் 2,3,4ம் பாதம் மற்றும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் சித்திரை 1,2ம் பாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபம் அதிகரிக்கும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு விரயாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை கட்டி முடிப்பீர்கள். சொத்து பிரச்சனை சுமுகமாக முடிவடையும். அஸ்தம், சித்திரை 1,2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும். உத்திரம் 2,3,4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் உருவாகும்.

   சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

   29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பிள்ளைகளின் வருங்ககாலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். விலையுயர்ந்த தங்க நகைகளை கவனமாக கையாளுங்கள். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் இக்காலக்கட்டத்தில் குடும்பத்தாருடன் கலந்தாலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவுகளும் எடுக்க வேண்டாம். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் வாகனத்தில் செல்லும் போது கவனத்தை சிதறவிடாதீர்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் கறாராக இருங்கள். யாராக இருந்தாலும் கையில காசு வாயில தோசைன்னு சொல்லிடுங்கள். போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். வாடிக்கையாளர்களை கனிவாக நடத்துங்கள்.

   கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். பங்குதாரர்களிடையே அவ்வப்போது வாக்குவாதங்களும், கருத்து மோதல்களும் வந்தாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வார்கள். வேலையாட்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். மேலதிகாரிகள் உங்களை குறைக்கூறினாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுவது நல்லது. முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும்.

   உங்களை வழக்கில் சிக்க வைக்க சிலர் முயல்வார்கள். சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். ஏமாற்றங்களும், மறைமுக அவமானங்களும் அவ்வப்போது வந்து செல்லும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினி துறையினருக்கு பார்வை கோளாறு வந்து நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும். கன்னிப் பெண்களே! காதல் வலையில் இப்போது சிக்கிக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கல்யாணம் தடைபட்டு முடியும். மாணவமாணவிகளே! விளையாட்டைக் குறைத்து படிப்பில் அக்கறை செலுத்துங்கள். தெரியாதவற்றை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அலட்சியப் போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இனி வேண்டாம். கலைத்துறையினர்களே! யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களால் புது வாய்ப்பு வரும். இந்த சனிப்பெயர்ச்சி மனப்பக்குவத்துடன் புதிய அணுகுமுறையில் பயணிக்க வைக்கும்.

  • துலாம்

   அடுக்கடுக்காக தோல்வி வந்தாலும் அஞ்சாமல் அதிரடியாக செயல்பட்டு வெற்றி இலக்கை எட்டும் வேங்கைகளே! ஏறக்குறைய ஏழரை ஆண்டுகளாக உங்களை சனிபகவான் ஆட்டிப்படைத்தாரே. அதிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக 2ம் வீட்டில் அமர்ந்து பேச்சால் பல பிரச்னைகளில் சிக்க வைத்து உங்களை கேளிக்கையாக்கி, கேள்விக்குறியாக்கிய சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலகட்டங்களில் 3ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள்.

   எப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்து கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்யம் அடைவீர்கள். நடைப்பயிற்சி, யோகா, தியானம் என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் கூச்சல், குழப்பம் என்று நிம்மதியில்லாமல் தத்தளித்தீர்களே, இனி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். அழகிய வாரிசு உருவாகும். வயசு ஏறிக் கொண்டே போகிறதே! ஒரு வரன் கூட அமையவில்லையே என்று வளர்ந்து நிற்கும் உங்கள் பெண்ணை பார்த்து நீங்கள் வருத்தப்படாத நாளே இல்லை. நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும்.

   சொந்த பந்தங்கள் வியக்கும்படி திருமணத்தை முடிப்பீர்கள். அடிக்கடி இனி வீடு மாற்றத் தேவையில்லை. கையில், கழுத்தில் இருந்ததைப் போட்டு, கடனை உடனை வாங்கி சொந்த வீட்டில் குடிபுகுவீர்கள். பலரின் உள்மனசில் என்ன நினைக்கின்றார்கள் என்று புரிந்து கொள்ளாமல் வெளிப்படையாக, வெகுளியாக பேசி சிக்கிக் கொண்டீர்களே! இனி எதிலும் கறாராக இருப்பீர்கள். யாரோ செய்த தவறால் நீங்கள் தலைமறைவானீர்களே, வழக்கில் இனி வெற்றிதான். கடனை நினைத்தும் நடுங்கினீர்களே, கல்யாணம் கிரகபிரவேசத்தில் எல்லாம் உங்களை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்களே, இனி எல்லோரும் ஆச்சர்யப்படும்படி சாதிப்பீர்கள். பலரும் வலிய வந்து பேசுவார்கள். வி.ஐ.பிகள் அந்தஸ்து பெறுவீர்கள்.

   சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

   சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு
   செய்வீர்கள். சிலசமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொண்டு உங்களை டென்ஷன்படுத்துவார்கள். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

   சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

   19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களின் ராசிநாதனாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் எதிலும் வெற்றி, எதிர்பாராத பணவரவு உண்டு.

   கூடாப்பழக்க வழக்கம் நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். அண்டை மாநிலக் கோவில்களுக்குச் சென்று வருவீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். விலகியிருந்த மூத்த சகோதரங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப் பாருங்கள்.

   சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

   29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பூமி சேர்க்கையுண்டாகும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில்
   வக்கரிப்பதால் வீண் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். வெளிவட்டாரத்தில் நிதானித்து செயல்படுவது நல்லது. 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் கெடு பலன்கள் குறைந்து நல்லது நடக்கும். வியாபாரத்தில் இனி கடையை நவீன மயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றுவீர்கள். அனுபவமிகுந்த புது வேலையாட்கள் அமைவார்கள்.

   விளம்பர யுக்திகளை சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டு தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மரவகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அரசாங்கக் கெடுபிடிகள் குறையும். உத்யோகத்தில் பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைபட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

   கணினி துறையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத்தகுந்த சம்பள உயர்வும் உண்டு. கன்னிப் பெண்களே! தடுமாறிக் கொண்டிருந்த உங்கள் மனசு தெளிவடையும். தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். மாணவமாணவிகளே! மதிப்பெண் உயரும். கலை, விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு வெற்றிப் பெறுவீர்கள். சோம்பல், விரக்தி நீங்கும். கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் நீங்கும். உங்களின் படைப்புகளுக்கு அரசு விருது அளிக்கும். மறைந்து கிடந்த உங்களின் திறமை வெளிப்படும். இந்த சனிப்பெயர்ச்சி பழைய பிரச்னைகளை களையெடுப்பதுடன் வாழ்வின் புது அத்தியாயத்தை தொடங்குவதாக அமையும்.

  • விருச்சிகம்

   விரிவான சிந்தனையும், வேடிக்கையானப் பேச்சும், வினோதப் போக்கும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக அமர்ந்து நாலா புறத்திலும் குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்தாரே, எந்த வேலையையும் முழுமையாக செய்யவிடாமல் உங்களை பைத்தியம் பிடிக்க வைத்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். வற்றிய பணப்பை நிரம்பும். அலைப்பாய்ந்த மனசு இனி அமைதியாகும். அவசரப்பட்டு முடிவுகளெடுத்து சில பிரச்னைகளில் சிக்கித் தவித்தீர்களே! இனி அனுபவப்பூர்வமாக யோசிப்பீர்கள். இதுவரை எதிர்மறை எண்ணங்களால் மன உளைச்சலுக்கு ஆளானீர்களே! சிலர் உங்களை அசிங்கப்படுத்தினார்களே!

   பலரையும் நம்பி ஏமார்ந்தீர்களே! யாருமே தன்னை மதிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டீர்களே! கல்யாணம்,காதுகுத்து போன்ற விசேஷங்களில் சிலர் உங்களை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தினார்களே! இனி இவையெல்லாம் மாறும். உங்களை கண்டும் காணாமல் போனவர்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். மனதில் இருந்த இனம்புரியாத பயம் விலகும். எப்போதும் தலை வலி, காது வலி, வயிற்று வலி என வலியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தீர்களே! சாப்பாட்டுக்கு முன், பின் என்று பல்வேறு மருந்து ,மாத்திரைகளை உட்கொள்ள நேர்ந்ததே, இனி உடல் நிலை சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை நீங்கும். சர்க்கரை, ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.

   உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். இனி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவி எப்போது பார்த்தாலும் எதையோ யோசித்தபடி ஒருவித கவலையில் ஆழ்ந்திருந்தாரே! இனி முகமலர்ச்சியுடன் உற்சாகம் அடைவார். என்றாலும் பாதச்சனியாக வருவதால் கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளும், மனஸ்தாபங்களும் வந்து நீங்கும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். முடிந்த வரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். பார்வைக் கோளாறு, பல்வலி வந்து நீங்கும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களானாலும் சரி அதிக உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வழக்குகளில் அலட்சியப்போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். சாலை விபத்து வந்து போகும்.

   சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

   சனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டியது வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீங்கள் சரியாக மதிப்பதில்லை என்று மூத்த சகோதரங்கள் நினைப்பார்கள்.

   சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

   19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவினங்களும் வந்துபோகும். ஆனால், விசாகம் 4ம் பாதம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலகட்டத்தில் தள்ளிப் போன திருமணம் முடியும். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வாகனம் மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் சின்னசின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும், முடிவில் சமாதானம் உண்டாகும். மனைவிக்கு அறுவை சிகிச்சை வந்து நீங்கும். பழைய வீட்டை சீர் செய்வீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பணவரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.

   சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

   29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பால்ய நண்பர்கள் உங்களை வந்து சந்திப்பார்கள். அவர்களால் திடீர் திருப்பங்களும் உண்டு. சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் ஓய்வெடுக்க முடியாத படி அதிகம் உழைக்க வேண்டி வரும். வழக்குகளில் இழுபறி நிலை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிம்மதி ஏற்படும்.

   பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாட்கள் இனி அடிக்கடி விடுப்பு எடுக்க மாட்டார்கள். கடையை விரிவாக்கி நவீன மயமாக்குவீர்கள். தள்ளிப்போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். ஹோட்டல், இரும்பு, வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.உத்யோகத்தில் நிலையற்ற சூழல் நிலவியதே! இனி அதிக சம்பளத்துடன் புதுவேலை கிடைக்கும். உங்களை கசக்கிப் பிழிந்த அதிகாரி வேறிடத்திற்கு மாறுவார். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேருவார். நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாகும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடிவரும். அலுவலகத்தில் வீண்பேச்சை குறையுங்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள்.

   இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! கல்வி, காதல் என அனைத்திலும் தோற்றீர்களே! தகுதிக்குத் தகுந்த வேலை கிடைக்காமல் தவித்தீர்களே! இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும். நல்ல வேலையும் கிடைக்கும். மாதவிடாய்க் கோளாறிலிருந்து விடுபடுவீர்கள். மாணவ மாணவிகளே! புத்தகத்தைத் தொட்டாலே தூக்கம் வந்ததே, இனி அந்த நிலை மாறும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். வகுப்பறையில் ஆசிரியரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்பெண் உயரும். நீங்கள் ஆசைப்பட்ட நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். கலைத்துறையினர்களே! வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். இந்த சனிப்பெயர்ச்சி இருளில் சிக்கியிருந்த உங்களை வெளிச்சத்திற்கு அழைத்துவருவதாக அமையும்.

  • தனுசு

   மற்றவர்கள் பயந்து பின்வாங்கும் செயல்களை தானாக முன்வந்து தைரியமாகச் செய்யும் ஆற்றலுடையவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக செலவுகளையும், அலைச்சல்களையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். ஜென்மச் சனி என்ன செய்யப் போகிறதோ என்றெல்லாம் புலம்பித் தவிக்காதீர்கள். பதுங்கி வாழ்ந்த நீங்கள், இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டீர்களே! ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக்கூட பலமுறை அலைந்து முடித்தீர்களே! இழப்புகளும், அவமானங்களும் உங்களை துரத்தியதே! இனி நிம்மதி பிறக்கும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமந்த பணமெல்லாம் வந்து சேரும்.

   அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜென்மச் சனி என்பதால் உடல் ஆரோக்யத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்பு போல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அல்சர் எட்டிப் பார்க்கும். உடல் பருமனாக வாய்ப்பிருக்கிறது, எனவே, எண்ணெயில் வறுத்த, பொரித்த மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக நீரைப் பருகுங்கள். காய்கறி, பழவகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மனைவிவழியில் செலவுகள் வரும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும்.

   இளைய சகோதரரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்றுபோனதே, இனி வங்கிக் கடனுதவியால் முழுமையாக கட்டி முடிப்பீர்கள். உங்களின் சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். மகளுக்கு இதோ அதோ என்று தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம் விரைவில் நடக்கும். மகனின் கூடா நட்பு விலகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிவிட்டு சந்தையில் புதிதாக அறிமுகம் செய்த வண்டியை வாங்குவீர்கள்.

   சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

   சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் கௌரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனிபகவான் உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் உத்யோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

   சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

   19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

   சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆனால் புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். வீடு மாறுவீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.

   சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

   29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பிள்ளைகளுக்கு தடைபட்டுக் கொண்டிருந்த
   திருமணம் கூடி வரும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உங்களின் நிர்வாகத் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் விலையுயர்ந்த பொருள் இழப்பு வந்து நீங்கும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
   வியாபாரத்தில் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலைப் போட்டு மாட்டிக் கொள்ளாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. சிலர் அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் தவறான ஆலோசனைகளை வழங்கக் கூடும்.

   இனி கணிசமாக லாபம் உயரும். வேலையாட்கள் இனி அடிக்கடி விடுப்பில் செல்ல மாட்டார்கள். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்து போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமைகள் அதிகரித்துக் கொண்டே போகும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மேலதிகாரியின் பாரபட்சமற்ற செயலை எண்ணி வருந்தினீர்களே, பழைய அதிகாரிகள் மாற்றப்பட்டு புது அதிகாரியால் உற்சாகம் அடைவீர்கள். அனாவசியமாக விடுப்புகள் எடுக்க வேண்டாம். தடைபட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி தாமதம் இல்லாமல் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது உஷாராக இருங்கள்.

   சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். கன்னிப் பெண்களே! முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். புதிய நண்பர்களை நம்ப வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். மாதவிடாய்கோளாறு, மன உளைச்சல் வந்துபோகும். மாணவ மாணவிகளே! விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொண்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். பின்வரிசையில் அமராதீர்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். அரசுத் தேர்வில் எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண் கிடைக்கும். கலைஞர்களே! வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். சம்பள விஷயத்தில் அதிக கண்டிப்பு வேண்டாம். இந்த சனிப்பெயர்ச்சி தோய்ந்து துவண்டிருந்த உங்களை புதுத் தெம்புடன் உலா வர வைப்பதாக அமையும்.

  • மகரம்

   குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர்களின் மனம் நோகாமல் பேசக் கூடியவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், எதையும் முடித்துக் காட்டும் வல்லமையையும் தந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் வருகிறார். ஏழரைச்சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இதுவரை லாபவீட்டில் நின்றிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு எதையும் தரவில்லை. உங்கள் ராசிநாதனான சனி பகவான் ராசிக்கு 12ல் சென்று மறைவதால் தடைபட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள்.
   ஏழரைச் சனி தொடங்குகிறதே! என்று பதற வேண்டாம். இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் மனதில் ஒருவித பதட்டத்தையும், அச்சத்தையும், எதிலும் ஈடுபாடற்ற நிலையையும், மன உளைச்சலையும் தந்தாரே. நம்பிக்கையின்மையால் துவண்டு போனீர்களே! குடும்பத்தில் சின்ன சின்ன வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்ததே! எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாமல் அடுத்தடுத்து வீண் செலவுகள் செய்து கொஞ்சம் கடனும் வாங்க வேண்டி வந்ததே, ஆனால் தற்சமயம் விரய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். கம்பீரமாக பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். இருவரும் பரஸ்பரம் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளை கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள்.

   அவர்களின் விருப்பங்களையும் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். நட்பு வட்டம் விரியும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தடைபட்ட குலதெய்வ பிராத்தனையை தொடருவீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். பால்ய நண்பர்களானாலும், பழைய சொந்தங்கள் ஆனாலும் அத்துமீறிப் பழகவோ, குடும்ப ரகசியங்களை சொல்லி ஆறுதல் அடையவோ வேண்டாம். யாருக்கும் விலை உயர்ந்த பொருட்களை, ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். நீங்களும் இரவல் வாங்க வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள். நீதி மன்றம் செல்லாமல் முடிந்த வரை பிரசனைகளை பேசி முடிக்கப்பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கு முன் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. உங்களைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்திய சொந்த  பந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.

   சனி பகவானின் பார்வை பலன்கள்:

   சனிபகவான் உங்களின் 2ம் வீட்டை பார்ப்பதால் பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனால், சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும். அவ்வப்போது கைமாற்றாக கடனும் வாங்க வேண்டி வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராட வேண்டியது இருக்கும். பேச்சால் பிரச்னை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். சனிபகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, கை, கால் அசதி வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திடீர் பயணங்கள் குறையும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

   சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

   19.12.2017 முதல் 18.01.2019 வரை மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருக்கும். பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடியுங்கள். ஊர் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்கள் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள். உங்கள் சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 வரை, 27.9.2019 முதல் 24.2.2020 வரை மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தள்ளிப் போன கல்யாணம் முடியும். வீட்டை கட்டி முடிப்பீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. புது வேலை கிடைக்கும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வழக்கு விவகாரத்தில் திருப்பம் உண்டாகும்.

   சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

   29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் இக்காலக்கட்டத்தில் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. அனுபவமிகுந்த புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள்.

   மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். மருந்து, கமிஷன், மரவகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு. உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு.

   கணினி துறையினர்களே, பதவிஉயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள். கன்னிப்பெண்களே! உங்கள் காதலின் உண்மையான ஆழத்தை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். வாடி வதங்கியிருந்த உங்கள் உடலும், முகமும் இனி மலரும். திருமணம் கூடும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். மாணவமாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனியுங்கள். நண்பர்களுடன் அனாவசியமாக சுற்றித்திரிவதை தவிர்க்கவும். விளையாட்டில் வெற்றியுண்டு. கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகள் பட்டி தொட்டியெல்லாம் பரவும். சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். இந்த சனிப்பெயர்ச்சி பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பதுடன் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குவதாக அமையும்.

  • கும்பம்

   அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்து விட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்ந்து உத்யோகத்தில் பிரச்னைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். இதுவரை எந்த வேலையை எடுத்தாலும் முழு மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தாரே! உழைப்பு உங்களிடத்தில் மட்டும் இருக்கும். ஆனால் அதற்கான பாராட்டும், பயனும் மற்றொருவருக்கு போய் சேர்ந்ததே! வேலைப்பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசி கெட்ட பெயர் எடுத்தீர்களே! நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்களே! அடுத்தடுத்து சோகச் செய்திகள் அதிகம் வந்து கொண்டு இருந்ததே, பணம், காசு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தியதே! இனி இவையெல்லாம் மாறும்.

   சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனத்தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பணவரவுக்கு இனி குறைவிருக்காது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படும். நாடாளுபவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்மனைவி இருவரும் கலந்துப் பேசி குடும்பச் செலவுகளை குறைக்க முடிவுகளெடுப்பீர்கள். பூர்வீக சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள்.

   மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். பழைய கடன் பிரச்னைகளை தீர்க்க புது வழி பிறக்கும். மனைவி வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். இதுவரை கண்டும் காணாமல் இருந்தவர்கள், இனி உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து பேசுவார்கள். பழுதான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷினை மாற்றுவீர்கள். சகோதரங்கள் நெருங்கி வருவார்கள். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். பழைய நகைகளை மாற்றி புதிய டிசைனில் வாங்குவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாய்வழி விசேஷங்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அத்தை, மாமன் வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.

   சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

   சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செறிமானக் கோளாறு, நரம்பு பிரச்னைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். சில நாட்களில் தூக்கமில்லாமல் போகும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. சாலையை கடக்கும் போது கவனம் தேவை.

   சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

   19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். முதுகு வலி, தலை வலி வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். ஊர் பொதுக்காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் அரைக்குறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன பணம் கைக்கு வரும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு மாறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் மனைவி வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

   சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

   29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் இக்காலக்கட்டத்தில் உடல்நலக்குறைவுகள் வந்து நீங்கும். 2.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் எதிலும் வெற்றி கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர்களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும்.

   இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி புகழ்வார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கணினி துறையினர்களே! பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.

   கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவ மாணவியர்களே! எத்தனை முறை படித்தாலும் மண்டைக்குள் எதுவும் தங்கவில்லையே! இனி கற்பூரமாய் பற்றிக் கொள்வீர்கள். அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினர்களே! இழந்த புகழை ஈடுகட்ட வேண்டுமென்று பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். சம்பளபாக்கி கைக்கு வந்துசேரும். இந்த சனிப்பெயர்ச்சி விரக்தி, மன உளைச்சலிலிருந்து மீள வைப்பதுடன் வசதிகளை அள்ளித் தருவதாக அமையும்.

  • மீனம்

   அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாக தலையிட மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்னைகளாலும், மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 10ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள். திறமை இருந்தும் சரியான சந்தர்ப்பங்கள் அமையாதலால் முடங்கிக் கிடந்தீர்களே! பல இடங்களில் அவமதிக்கப்பட்டீர்களே! தந்தைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உருவானதுடன், அடிக்கடி மருத்துவச் செலவுகளும் வந்ததே! வெளியில் சொல்ல முடியாத பல கஷ்டங்களை அனுபவித்தீர்களே! சிலர் தந்திரமாகப் பேசி உங்களை ஏமாற்றினார்களே! இனி அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தினருடன் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் தீரும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்வார்கள். தந்தையார் குணமடைவார். அவருடன் இருந்த மோதல்கள் விலகும்.

   பிதுர்வழிச் சொத்துப் பிரச்னைகளில் பல சிக்கல்கள் இருந்ததே, இனி முடிவுக்கு வரும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அங்கீகாரமில்லாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தீர்களே, இனி அந்த பணமெல்லாம் கைக்கு வரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். அவர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கைமாற்றாக, கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

   சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

   சனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சி கையெழுத்திட வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். ஆனால் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள்.

   சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

   19.12.2017 முதல் 18.1.2019 மற்றும் 12.8.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். தங்கம் சேரும். மகளுக்கு வரன் அமையும். அக்கம்பக்கம் வீட்டாருடன், உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்கள் உதவுவார்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

   சனிபகவானின் வக்ர சஞ்சாரம்:

   29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பணவரவு திருப்திகரமாக இருந்தும் செலவினங்கள் அதிகரிக்கும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் யாரையும் நம்பி பெரிய காரியங்களில் இறங்கி விடாதீர்கள். 2.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் விலையுயர்ந்த ஆபரணங்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் முடங்கிக் கிடந்த நீங்கள் ஆர்வம் அடைவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். வியாபார நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

   தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள். உத்யோகத்தில் ராசிக்கு 10ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். மேலதிகாரி உதவுவார். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் சாதகமாகவே அமையும். புது சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.

   கன்னிப்பெண்களே! காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்னைகளால் நிலைகுலைந்து போனீர்களே! இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். வீட்டில் பார்க்கும் வரனே முடியும். மாணவமாணவிகளே! விளையாட்டால் படிப்பில் நாட்டமில்லாமல் போனதே! இனி படிப்பில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! முன்னனி கலைஞர்களுடன் அடிக்கடி மோதல் போக்கும் ஏற்பட்டதே! இனி அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி தடுமாறிக் கொண்டிருந்த உங்களை தலை நிமிர வைப்பதுடன், சமூக அந்தஸ்தையும் தருவதாக அமையும்.