accident_1470725550

மெக்சிக்கோவில் சுற்றுலாப் பேருந்து விபத்து; 12 பேர் பலி 18 பேர் காயம்


மெக்சிகோவின் கிழக்கு கடற்கரையில் சுற்றுலாப்பேருந்து விபத்தில் சிக்கியதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 18 பேர் காயமடைந்துள்ளனர்.

மெக்சிக்கோ நாட்டில் குயின்டானா ரூ என்ற சுற்றுலாத்தலத்திற்கு 31 பயணிகளை ஏற்றிச்சென்ற கோஸ்டா மாயா என்ற பஸ் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.

அவர்கள் பழங்கால மாயன் வம்சத்தினர் ஆட்சி செய்த துலும் என்ற சுற்றுலாப் பகுதியில் உள்ள சாச்சோபென் என்ற தொல்லியல் பகுதியை நோக்கிப் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ் விபத்திற்குள்ளானது.

இதில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 7 பேர் அமெரிக்கர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் குயின்டானா ரூ பகுதியில் கான்கன் பகுதிக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலாப்பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி 11 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.