shot

நத்தார் விழாவில் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை


மெக்சிகோவில் நத்தார் விழாவில் பங்கேற்ற பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் வேராகுரூஸ் மாநிலத்தை சேர்ந்த 35 வயதான குமாரோ பெரேஸ் என்ற பத்திரிக்கையாளர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அகேகான் நகரில் தன் மகன் படிக்கும் பள்ளியில் நடந்த நத்தார் விழாவில் கலந்துகொண்டார். அப்போது விழா நடந்த வகுப்பறைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ப நபர் ஒருவர் பெரேஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இதில் பெரேஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் போதை கடத்தல் கும்பல் குறித்து பெரேஸ் தொடர்ந்து எழுதி வந்ததால் அவரை போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் தான் சுட்டுக் கொன்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மெக்சிகோ நாட்டில் 2017 ஆம் ஆண்டில் மட்டும் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.