united-nations-building-new-york-a020716-aw415

ஐ.நா மீதான அமெரிக்காவின் பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு நிதியுதவி நீக்கம்


ஐ.நா இற்கான அமெரிக்காவின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க பணம் நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் மேலும் சில நீக்கங்களும் கொண்டு வரப் படலாம் எனவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

முக்கியமாக 2018 முதல் 2019 காலப் பகுதி வரையில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் நிதி ஒதுக்கீட்டில் $285 மில்லியன் குறைக்கப்படவுள்ளது எனவும் இதை விட ஐ.நா இன் முகாமைத்துவம் மற்றும் ஏனைய சில தேவைகளுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஐ.நா இற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹலே அண்மைக் காலமாக ஐ.நா அதிகளவு செலவு செய்து வருவதும் அவை வலுவற்ற தேவைகளுக்காகவென இருப்பதும் நாம் நன்கறிந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஞாயிற்றுக்கிழமை இது குறித்து நிக்கி ஹலே தெரிவித்த கருத்தில் இந்த நடவடிக்கை சரியான திசையில் மேற்கொள்ளப் பட்ட மிகப் பெரிய நகர்வு என கூறினார்.

மேலும் எம்முடைய தேவைகளையும் கருத்திற் கொண்டு ஐ.நா இன் தரத்தை உயர்த்துவதற்காகவும் என்றே இவ்வருட பட்ஜெட்டில் இந்த மாற்றம் கொண்டு வரப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா இன் தீர்மானத்தை ஆதரவளித்த நாடுகளுக்கு நிதியுதவி நிராகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்த சில தினங்களில் ஐ.நா மீதான பட்ஜெட்டில் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் டிரம்பின் இந்த அச்சுறுத்தலை அடுத்து நிக்கி ஹலே சுமார் 180 நாடுகளுக்கு அமெரிக்கா ஜெருசலேம் தீர்மானத்தை ஆதரிப்பவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்கின்றது என்று தொனிப்பட கடிதம் வரைந்துள்ளார்.

ஐ.நா மீதான அமெரிக்காவின் பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவு நிதியுதவி நீக்கம் கொண்டு வரப் பட்டதை அடுத்து ஐ.நா பொதுச் சபை மற்றும் மனித உரிமைகள் அமைப்பு போன்றவை தமது வருங்கால செயற்பாடுகளில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்துக் கவலை வெளியிட்டுள்ளன.