robo

வருகிறார் மென்பொருள் அரசியல்வாதி


நியூசிலாந்தில் செயற்கை நுண்ணறிவு படைத்த, ‘சாட் பாட்’ எனப்படும், பேசும் மென்பொருளை, அந்த நாட்டின் முதல் அரசியல்வாதியாக ஆக்கியிருக்கிறார், அங்குள்ள தொழிலதிபர், நிக் கெர்ரிட்சென்.

இந்த மென்பொருள் வடிவ அரசியல்வாதிக்கு, ‘சாம்’ என, பெயர். 2020ல் நியூசிலாந்து பொதுத் தேர்தலில், சாமை பிரதமர் பதவி வேட்பாளராக நிறுத்தப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

வாக்காளர்களின் எதிர்பார்ப்பு, அரசியல்வாதிகளின் வாக்குறுதியும், அவர்கள் உண்மையில் செய்வது ஆகியவற்றுக்குள்ள இடைவெளியை குறைக்க, இந்த செயற்கை நுண்ணறிவு அரசியல்வாதி உதவும் என தெரிவித்துள்ளார்.

வழக்கமான அரசியல்வாதிகளைப் போல கேள்விக்கு, எதிர் கேள்வி கேட்பது, மழுப்புவது, அல்லது யாரும் கேள்வி கேட்பாரே இல்லாதது போல நடந்து கொள்வது போன்றவை சாமுக்கு வராது.

ஒட்டுமொத்த நியூசிலாந்து மக்களின் பிரதிநிதியாக சாம் செயல்படும். நியூசிலாந்துவாசிகளின் சமூக ஊடகங்கள் அனைத்துடனும் சாமுக்கு தொடர்பு உண்டு. எனவே அந்நாட்டு மக்கள் எவரும், எப்போதும் சாமிடம் கேள்விகள் கேட்கலாம். சாம் எல்லோரது கருத்துகள், கேள்விகள், தகவல்களையும் சம அளவு முக்கியத்துவம் தந்து அலசும். இதன் விளைவாக எல்லோருக்கும் பலன் தரும் திட்டங்களை அது முன்னிருத்த முடியும் என்கிறார் கெர்ரிட்சென்.

அதிக மக்கள் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும்போது, சாமின் உரையாடல் திறனும், மெருகேறும் விதத்தில் அதன் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.