1nayanthara

புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் நன்றி தெரிவித்த நயன்தாரா!


உங்கள் இதயங்களில் எனக்கு சின்னதாக ஓரிடம் அளித்தமைக்கு அன்பும் நன்றியும் என 2018 புத்தாண்டு வாழ்த்துகளை நடிகை நயன்தாரா தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்,  என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய எனது ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்கள் கனவுகள் அத்தனையும் கைகூடட்டும்.

உங்கள் அன்பால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். நேர்மையான நிபந்தனையற்ற அன்பு இன்னமும் இருக்கிறது என்பதை நீங்கள்தான் உணர வைத்திருக்கிறீர்கள். இந்த வாழ்க்கை அழகானது என்பதை மீண்டும் மீண்டும் நீங்கள்தான் உணர்த்துகிறீர்கள்.

எது நடந்தாலும் கடின உழைப்பை முன்னெடுத்து மற்றதை இறைவனிடத்தில் விட்டுவிட வேண்டும் என்பதை உங்கள் அனைவரின் அன்பால் புரிந்துகொண்டேன். நீங்கள் என்மீது செலுத்தும் அன்புக்கு நான் செய்யக்கூடியது எல்லாம் பொழுதுபோக்கு படங்களோடு ‘அறம்’ போன்ற பொறுப்பான படங்களிலும் நடிப்பதே ஆகும்.

அச்சு, காட்சி ஊடகங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும், எனக்கு ஆதரவளித்த சினிமா பிரபலங்கள், திரைவிமர்சகர்கள் என அனைவருக்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு அன்பும், நேர்மறையான தாக்கங்களும் நிறைந்த ஆண்டாக இருந்தது. இதை நீங்கள்தான் சாத்தியமாக்கினீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது அன்பை உரித்தாக்குகிறேன். உங்கள் இதயங்களில் எனக்கு சின்னதாக ஓரிடம் அளித்தமைக்கு அன்பும் நன்றியும். 2018 உங்கள் அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும். எப்போதும் நேர்மறையாகவே சிந்தியுங்கள்.

நன்றி

நயன்தாரா,

இவ்வாறு நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.