electronic aeroplane

மின்சாரத்தில் இயங்கும் விமானம்


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, எலக்ட்ரோ ஏரோ, விமானிகளுக்கு பயிற்சி தர உதவும் சிறு விமானம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடியது என்பது தான் இதன் சிறப்பு.

ஐரோப்பாவில், சில நிறுவனங்கள், பயணியருக்கான சிறு மின் விமானங்களை வடிவமைத்து வெள்ளோட்டம் பார்த்துள்ளன. என்றாலும், முதல் முறையாக விமானிகளுக்கு பயிற்சி தருவதற்கென்று, அரசு அனுமதி பெற்ற மின் விமானம் இது தான்.

சுலோவேனியாவைச் சேர்ந்த பிபிஸ்ட்ரெல் நிறுவனம், இந்த விமானத்தை வடிவமைத்து உதவியிருக்கிறது. இம்மின் விமானத்தின் மின்கலனை ஒரு முறை மின்னேற்றம் செய்தால், ஒன்றரை மணி நேரம் வரை வானில் பறக்க முடியும். தேவைப்பட்டால் மீண்டும் தரையிறங்கி, ஏற்கனவே மின்னேற்றம் செய்து வைக்கப்பட்ட மின்கலனை உடனே மாற்றி வானில் பறக்க முடியும் என்கிறது, எலக்ட்ரோ ஏரோ.

மின் கார்கள் வெகு விரைவில் உலகெங்கும் பரவலாகப் போகும் நிலையில், முழு மின் விமானம் ஒன்றுக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியிருப்பது, விமானத் துறையில் ஒரு புரட்சி என்கின்றனர், விமான ஆர்வலர்கள்.