pop

போப் ஆண்டவர் தலைமையில் 36000 அடி உயரத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம்!


சிலி நாட்டில், 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, போப் ஆண்டவர் ஆசியுடன் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது.

சிலி நாட்டுக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தார். போப் பிரான்சிஸ் சான்டியாகோ நகரில் இருந்து வடபகுதியில் இருக்கும் ஐகியூகியூ நகருக்கு லதாம் விமான நிறுவனத்தின் ஏர்பஸ் 321 என்ற விமானத்தில் நேற்று பயணம் செய்தார்.

இந்த விமானத்தில் போப் பிரான்சிஸ், விமானத்தின் தலைவர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பயணம் செய்தனர். விமானம் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது, அதில் பணியாற்றும் ஊழியர்கள் இருவர் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி போப் பிரான்சிஸிடம் வேண்டுகோள் விடுத்தனர்.மணமகன் கார்லோஸ் சியுபார்டி, 41 வயது, மணமகள் வுலா போடெஸ்ட்,39 வயது ஆகியோரின் வேண்டுகோளை ஏற்ற போப் ஆண்டவர் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இந்த திருமணம் குறித்து மணமகன் கார்லோஸ் சியுபார்டி கூறுகையில், ” நாங்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் திகதியே திருமணம் செய்துவிட்டோம். அப்போது, சிலி நாட்டில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால், தேவாலயம் சிதைவடைந்தது. ஆதலால், அங்கு திருமணம் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது. கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடக்கவில்லை. ஆதலால், இப்போது உங்கள் முன் திருமணம் செய்ய விரும்புகிறோம், என போப்பிடம் தெரிவித்தோம். அதற்கு அவர், இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என்று போப் எங்களிடம் கேட்டார். ‘ஆம்’ எனத் தெரிவித்தோம்.

எங்கள் இருவருக்கும் மிகச் சுருக்கமாக திருமண சடங்குகளை போப் பிரான்சிஸ் செய்து வைத்தார். லதாம் ஏர்லைன்ஸ் விமானத்தின் தலைவர் இக்னேஷியோ கியூடோ எங்கள் திருமணத்தின் சாட்சியாக இருந்தார்.

அதன்பின் எங்களுக்கு, போப் பிரான்சிஸ் கையொப்பம் இட்ட, கையால் எழுதப்பட்ட திருமணச் சான்றிதழ் வழங்கப்பட்டது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் தலைமையில், விமானத்தில் நடந்த இந்த திருமணம் விலை மதிப்பில்லாதது. இதற்கு முன் போப் பிரான்சிஸ் விமானத்தில் யாருக்கும் திருமணம் செய்து வைத்தது இல்லை.

எங்களுக்கு முறைப்படி திருமணம் இப்போதுதான் நடந்துள்ளது என்கிற போதிலும், தற்போது 6 வயதிலும், 3 வயதிலும் இரு குழந்தைகள் உள்ளனர். விரைவில் ‘மினி ஹனி மூன்’ செல்ல திட்டமிட்டுள்ளோம்” என கார்லோஸ் சியுபார்டி தெரிவித்தார்.

புதுமணத் தம்பதியினருக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறிய அறிவுரையும் கூறியுள்ளார். அதில் ”திருமணத்தன்று கையில் அணிவிக்கப்படும் மோதிரம் மிகவும் இறுக்கமாக இருக்கக் கூடாது. ஏனென்றால் அது உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். அதேசமயம், விரலைக் காட்டிலும் மோதிரம் சிறிது பெரிதாக இருந்தால், எளிதாக விரலில் இருந்து கழன்றுவிடும். ஆதலால், கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.