naani

கார் விபத்திலிருந்து காயங்களுடன் உயிர் தப்பினார் நடிகர் நானி!


படப்பிடிப்பிலிருந்து வீடு திரும்பும்பொழுது ஏற்பட்ட கார் விபத்திலிருந்து நடிகர் நானி சில காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

வெப்பம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருந்தாலும், நான் ஈ படத்தின் மூலமே நடிகர் நானிக்கு தமிழில் ரசிகர் பட்டாளம் கிடைத்தது. தமிழில் 3 படங்களில் மட்டும் நடித்திருந்தாலும், தெலுங்கில் மிகப்பெரிய நடிகராக வலம்வருபவர் நடிகர் நானி.

இவர் தற்போது ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடிந்ததும் தன்னுடைய இன்னோவா காரில் டிரைவர் ஸ்ரீனிவாசுடன் வீடு திரும்பியுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது மின்சாரக்கம்பியில் மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. விபத்தின்போது காரில் இருந்த ஏர்- பேக் உதவியால் சிறிய காயங்களுடன் இருவரும் உயிர் தப்பினர். இதனையடுத்து வேறு ஒரு காரை வரவழைத்து அதில் இருவரும் பத்திரமாக வீடு திரும்பினர்.

இந்நிலையில் விபத்து குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் நானி, “அங்கும் இங்குமாக சின்ன சின்ன சிராய்ப்புகள் தான். வேறு காயம் ஏதும் இல்லை. இதனால் யுத்தம் படத்திற்கு சின்ன பிரேக். விரைவில் ஆக்சன் தொடங்கும்” என பதிவிட்டுள்ளார்.