eye

கண்ணை பார்த்தே இதயத்தை படிக்கும் மென்பொருள்!


ஒருவரது விழித் திரையின், ‘ஸ்கான்’ மட்டும் இருந்தால், அதை வைத்தே, அவருக்கு இதயக் கோளாறு ஏதும் வருமா வராதா என்பதை கணிக்க முடியுமா… முடியும் என்கிறது, கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனமான வெரிலி லைப் சயன்சஸ் ஆகியவற்றை சேர்ந்த ஆய்வாளர்கள் செய்துள்ள ஓர் ஆய்வு.

இதய நோயால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சம் பேர், சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த விழித்திரை ஸ்கேன்களை சேகரித்தனர் , ஆராய்ச்சியாளர்கள். பின் அவற்றை, செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் கொடுத்து அலச கூறினர்.

நோயாளிகளின் பொதுவான உடல்நலத் தகவல்களுடன் அதை அலசிப் பார்த்து, இந்த நபருக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதயம் தொடர்பான கோளாறுகள் வரக்கூடும் என, 70 சதவீத துல்லியத்துடன் கூகுளின் செயற்கை நுண்ணறிவு கணித்துச் சொல்லிவிட்டது.

ஏற்கனவே, இதய நோயை கணிக்க உதவும், ‘ஸ்கோர்’ என்ற சோதனை முறை, ரத்த மாதிரிகளை வைத்து, 72 சதவீத துல்லியத்துடன் கணித்து வருகிறது. ஆனால், கூகுளின் சோதனைக்கு ஊசி குத்தி, ரத்தம் எடுக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.